Friday, March 2, 2012

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 வருட சிறை! - புதிய சட்டங்கள்

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது,
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால்தான் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்தது. தவறுகளுக்கான அபராதத் தொகையை பத்து மடங்காக உயர்த்தவும், தண்டனையை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

* குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுனரின் ஆல்கஹால் அளவு கணக்கிடப்பட்டு, அதற்கு தகுந்தவாறு இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
* சிவப்பு சிக்னலை மீறி சென்றாலோ, ஹெல்மட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ முதல் முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்படும்.
* செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு முதலில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
* நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேகமாக வாகனம் ஓட்டினால் முதல் முறை ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...