Friday, March 2, 2012

மின்சாரத்திற்கு புதிய ஏற்பாடு! - ஒளிரப்போகிறதா தமிழ் நாடு!

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான திட்டத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உருவாக்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், முதற்கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதன்மூலம் 2 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 1000 அரசு அலுவலகங்களை இதற்காக தேர்ந்தெடுத்துள்ளோம். இதோடு மட்டுமல்லாது, வீடுகள் மற்றும் தெருவிளக்குகளிலும் இது பயன்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்பட உள்ள மின்சாரத்தை 3 லட்சம் வீடுகள் மற்றும் 1 லட்சம் தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள், 60 ஆயிரம் வீடுகள் மற்றும் 20 ஆயிரம் தெருவிளக்குகளுக்கு சோலார் பேனலை நிறுவ தீர்மானித்துள்ளது. இந்த சோலார் பேனலை, பலமாடிக் கட்டிடங்கள் மட்டுமல்லாது அனைத்து வீடுகளுக்கும் பயன்படுத்த அறிவுறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
வீடுகள் மற்றும் பொது சுகாதார மையங்களில், சோலார் வாட்டர் ஹீட்டர்களை நிறுவ மக்களிடம் வலியுறுத்த உள்ளோம். எலெக்ட்ரானிக் சிட்டியான பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் முன்னணி நகரங்களில், சோலார் வாட்டர் ஹீட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.
சூரிய சக்தி கொள்கை, கடந்த சிலவருடகாலமாக கிடப்பிலேயே கிடந்ததாகவும், 2010ம் ஆண்டு மே மாதத்தில் அரசால் தூசு தட்டப்பட்ட இக்கொள்கை, 2012 ஜனவரி மாதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. சூரிய சக்தி கொள்கையை வெகுநாட்களாக எதிர்பார்த்து வருவதாக எல் அண்ட் டி மற்றும் ஜினர்ஜி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாநாட்டில், இதுகுறித்து விவாதிக்க இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...