Monday, August 8, 2011

சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி


Supreme Court
சென்னை: பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் முதல் கட்டமாக 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறிய தமிழக அரசு இத்திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தது. இதுதொடர்பாக சட்டசபையில் சட்டத் திருத்தமும் கொண்டு வந்தது.


இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்தது. மேலும் நடப்பாண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துமாறும் அது உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளில் அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கிதலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு, பெற்றோர்கள் தரப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தரப்பு என முத்தரப்பில் வாதங்கள் நடந்தன. கடந்த வியாழக்கிழமையன்று வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஜே.எம்.பன்சால், தீபக் வர்மா மற்றும் செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி:

நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை கோர்ட் ஏற்கிறது. மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்த கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்.

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

சமச்சீர்கல்வித் திட்டத்தை இன்னும் 10 நாட்களில் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வி அமலாகிறது

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. நடப்பாண்டிலேயே 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றே சட்டசபையில் தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

3 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு

3 பேர் அடங்கிய பெஞ்ச் என்பதால் இருவிதமான தீர்ப்பு வெளியாகலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் ஒரே மனதாக, ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் இழுபறி தவிர்க்கப்பட்டுள்ளது.


பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சமச்சீர் கல்வியே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்றுள்ளனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடியதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட்ரிகுலேஷனுக்கு மூடு விழா

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஓரியன்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் என்ற நான்கு வகை கல்வி முறைகள் தமிழகத்தில் ரத்தாகிறது.

மாறாக அனைத்து பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்தையே சொல்லித் தரும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...