Tuesday, May 17, 2011

கேட்பாரற்று கிடக்கும் மக்கள் வரிப்பணத்தின் 500 கோடி - புதிய தலைமைச் செயலகம்!

ரூ. 500 கோடி செலவில் கட்டப்பட்ட எப்பொழுதும் பரபரப்பாக இருந்துகொண்டிருக்கும் புதிய தலைமைச்செயலக வளாகம், இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. பொதுமக்கள் சுற்றித் திரியும் காட்சியகமாக மாறியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள, அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்திலிருந்து அமைச்சர்களின் அலுவலகங்கள், அரசுத் துறை செயலர் அலுவலகங்கள் மற்றும் இதர பிரிவுகள் அனைத்தும், புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளன. வெறிச்சோடிக்கிடக்கும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தைப் பார்க்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, காலியாகக் கிடக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை ஜாலியாக பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில், சட்டசபை நடக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அமரும் இருக்கைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. புனித ஜார்ஜ் கோட்டையில் உருவாகிவரும் புதிய சட்டசபை கூட்ட அரங்கிற்கு, இந்த இருக்கைகள் கொண்டு செல்லப்பட உள்ளன. 
 
இகட்டிடத்தை பராமரிக்கும் பணியும், ஒப்பந்ததாரர்களின் மீதியிருக்கும் கட்டுமானப் பணிகளும்தான் இப்போது இங்கு இப்புதிய  தலைமைச் செயலக கட்டிடத்தில் நடந்தவண்ணம் உள்ளன.
 
இக்கட்டடத்தில் செயல்பட்டு வரும் தகவல் மையம் (என்.ஐ.சி.) மட்டும் இங்கேயே செயல்பட்டு வருகிறது. தகவல் மையத்தை இடமாற்றம் செய்வதற்கு இன்னும் உத்தரவு வரவில்லை என அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வந்த செம்மொழி நூலகம், புதிய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுத்து வந்த அனைத்து பொருட்களும், தரைத்தளப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. மாற்று இடம் ஒதுக்கப்பட்டபின், அவைகள் அங்கு அடுக்கப்பட்டு, நூலகம் இயங்கும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...