Thursday, May 2, 2013

இழந்த செல்வாக்கை மீட்பதற்காக சாதி மோதலைத் தூண்டும் பாமக: சிபிஎம் கடும் தாக்கு


கோயம்புத்தூர்: தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டி இழந்த பலத்தை மீட்பதற்கு பாமகவினர் முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியினர், மரக்காணத்தில் உள்ள தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, பீமா ராவ் ஆகியோர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

கடந்த 2012-ம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போதும் சமுதாய நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் காடுவெட்டி குரு பேசியுள்ளார். இதைத் தொடர்ந்தே தருமபுரி மோதல் சம்பவம் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவையொட்டியும் மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை பாமகவினர் தூண்டி வருகின்றனர். சமூக நீதியைக் காக்கவும், சமுதாய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் பாமக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி ரீதியான அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதைக் கொண்டு தேர்தல் முடிவுகளும் அமையாது. தமிழகத்தில் நிலவி வரும் சாதி மோதலைக் கண்டித்து மே 8-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...