Monday, August 8, 2011

இளம் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் புதிய கலாசாரம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இளம் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த பள்ளி, கல்லூரிகளில் மாணவ&மாணவிகளுக்கு ஒருபாடமாக போதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களால் எழுப்பப்பட்டுள்ளது.

மோசமான இந்த கலாசாரம் தமிழகத்தில் தற்போது பொதுமக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு மோசமான கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவ&மாணவிகளானாலும் சரி, வயதுக்கு வந்த இளம் பெண்களானாலும் சரி, இவர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போகும் சம்பவங்களும், அல்லது கடத்தி செல்லப்படும் சம்பவங்களும் மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையங்களில் ஏராளமாக பதிவு செய்யப்படுகின்றன.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தங்களது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு பயந்த நிலையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளி, கல்லூரிக்கு சென்ற தங்கள் பிள்ளைகள் பத்திரமாக திரும்பி வருவார்களா? என்று எதிர்பார்த்தப்படி பெற்றோர்கள் இருக்கிறார்கள். மாலையில் பிள்ளைகள் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தபிறகுதான், பெற்றோர்களின் மனம் சந்தோஷமடைகிறது. அதன்பிறகுதான் மற்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

சென்னை நகரிலும் இளம் பெண்களும், பள்ளி மாணவ&மாணவிகளும் வீட்டைவிட்டு வெளியேறும் சம்பவங்களும், அல்லது காதல் பிரச்சினையால் கடத்தி செல்லும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. திருமணமான இளம் வயது பெண்கள்கூட கணவர்களையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு, வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ&மாணவிகள்கூட ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி ஓட்டம் பிடித்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் சைதாப்பேட்டையில் 9 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் திடீரென்று காணாமல் போய்விட்டான். பெற்றோர்கள் அவனை தேடி அலைந்தனர். சைதாப்பேட்டை போலீசாரும் அவனை தேடினார்கள். அந்த சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாமோ? என்றுகூட பயந்தார்கள். ஆனால் அந்த சிறுவன் கள்ள ரெயில் ஏறி, அவனது சொந்த மாநிலமான பீகார் மாநிலத்துக்கு போய்விட்டான்.

அந்த சிறுவனிடம் ஏன் இவ்வாறு கள்ள ரெயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு சென்றாய் என்று விசாரித்தபோது, ஒரு ருசிகர தகவல் கிடைத்தது. எனக்கு 9 வயது ஆகிறது. என்னை இப்போது போய் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளனர். வகுப்பில் மற்ற மாணவர்களைவிட, நான் வயதில் பெரியவனாக இருக்கிறேன். என்னை மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு படிக்க பிடிக்கவில்லை. அதனால்தான் கள்ள ரெயில் மூலம் சொந்த ஊருக்கு போனேன் என்று தெரிவித்தான்.

அவனது பிரச்சினை நியாயமாக இருந்தாலும், அவன் ஓடிப்போனது பெற்றோர் களை கதிகலங்க வைத்துவிட்டது. செம்பியத்தில்கூட 11 வயது மாணவி ஒருத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு போகாமல் திடீரென்று ஓடி போய்விட்டாள். அதன்பிறகு உறவினர்கள் வீட்டில் இருந்து அந்த மாணவியை பெற்றோர் மீட்டு வந்தனர். படிப்பில் உள்ள பிரச்சினை காரணமாக அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்தது.

பாடம் நடத்தவேண்டும்

இதுபோல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் சம்பவங்களால் பெற்றோர்களும், போலீசாரும் வீணாக பதற்றப்பட வேண்டியதுள்ளது. ஆனால் இதுதொடர்பாக வரும் புகார்கள் மீது போலீசாரும் சில நேரங்களில் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. காணாமல் போனவர்கள் மீண்டும் திரும்பி வந்தார்களா? என்பது பற்றி சம்பந்தப்பட்ட பெற்றோர்களும், போலீசுக்கும் தகவல் கொடுப்பதில்லை.

இவ்வாறு வீட்டைவிட்டு ஓடிப்போகும் கலாசாரத்தை ஒழிப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் மாணவ&மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இதை ஒரு பாடமாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
திடீரென்று வீட்டைவிட்டு ஓடிப்போவதால் ஏற்படும் பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் மாணவ&மாணவிகளுக்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்றும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் விட்டைவிட்டு ஓடிப்போகாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அரசு இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது என்ற கருத்தும் எழுந்துள்ளது.

நன்றி- தினத்தந்தி

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...