Friday, August 19, 2011

மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலையை நோக்கி உலகம்?


Morgan Stanley
அமெரிக்காவையும் ஐரோப்பாவின் சில நாடுகளையும் பொருளாதார மந்தநிலை தாக்கப் போவதாக மோர்கன் அண்ட் ஸ்டான்லி நிதி ஆலோசனை அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து உலகெங்கும் பெரும் பரபரப்பும் பங்குச் சந்தைகளில் மீண்டும் பெரும் சரிவும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தை AAA என்ற அதி உச்ச நிலையிலிருந்து AA என்ற நிலைக்கு ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்ததையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. இந் நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அந்தப் பக்கத்தையும் (அமெரிக்கா) இந்தப் பக்கத்தையும் (ஐரோப்பா) பொருளாதாரத் தேக்க நிலை தாக்கப் போகிறது என்று மோர்கன் அண்ட் ஸ்டான்லி எச்சரித்துள்ளது, உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த எச்சரிக்கையால், வழக்கம்போல, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் இருந்து எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிடவே, தங்கத்தின் விலை ஒரே இரவில் சர்வதேச அளவில் பெருமளவில் உயர்ந்துவிட்டது.


நேற்று அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ஆரம்பித்த அடி, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இன்று பரவியது. இந்தியப் பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் இன்று உணரப்பட்டது.

இன்போஸிஸ் உள்ளிட்ட சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகள் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவை சந்தித்தன. டிசிஎஸ்சின் பங்கு மதிப்பு 6 சதவீதமும், விப்ரோவின் மதிப்பு 5.4 சதவீதமும் சரிந்தன. எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் தான் மிக அதிக அளவாக 7.8 சதவீதம் சரிவை சந்தித்தன.

அமெரிக்கா, ஐரோப்பாவில் மந்த நிலை ஏற்பட்டால், அங்கு எரிபொருளுக்கான தேவை குறையலாம் என்ற அச்சத்தின் காரணமாக லண்டன் பங்குச் சந்தையில் (இங்கு தான் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிக்கப்படுகிறது) பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 4 டாலர்கள் சரிந்துள்ளது.

இதற்கிடையே மோர்கன் அண்ட் ஸ்டான்லி வெளியிட்டுள்ற அறிக்கையில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கடைபிடிக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அந்த நாடுகளின் நிதி நிலைமையை சீர்படுத்துவதாக இல்லை. இதனால் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தேக்க நிலைக்கு மிக அருகே நிற்கின்றன.

இதனால் 2011ம் ஆண்டில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி முதலில் கணக்கிட்டபடி 4.2 சதவீதமாக இருக்காது. அது 3.8 சதவீதம் அளவுக்கு சரியலாம். அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சி 1.5 சதவீதத்தைக் கூட தாண்டாது.

அதே நேரத்தில் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முதலில் கணக்கிடப்பட்ட 6.4 சதவீதத்தை விட கொஞ்சம் குறைந்து 6.1 சதவீதமாகலாமே தவிர அதைவிடக் குறைய வாய்ப்பில்லை.

வரும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான 6 மாதங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு மிக மிக கஷ்டமான காலகட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

2008ம் ஆண்டில் அமெரிக்காவின் சிட்டி பேங்க் உள்ளிட்ட பல வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் திவால் ஆன போது, அதன் தாக்கத்தை உலகம் மிகக் கடுமையாக உணர்ந்தது. அப்போது ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் வேலைகள் முதல் ஜவுளித் தொழில் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து மீளவே 2 ஆண்டுகள் ஆயின. இந் நிலையில், மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்க நிலையா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளன நாடுகள்...!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...