Tuesday, August 9, 2011

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 57 லட்சம் செலவில் சரக்கு போக்குவரத்து வசதி


திருச்சி,ஆக.8- விமான நிலைய பழைய டெர்மினல் கட்டிடத்தில் 57 லட்சம் ரூபாய் சரக்கு போக்குவரத்துக்கான (கார்கோ போர்ட்) கட்டுமான பணி துவக்க பூமிபூஜை நடந்தது.
திருச்சி விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து நடக்கிறது. பயணிகள் மற்றும் விமான சேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் ஷார்ஜா, குவைத், கொழும்பு போன்ற இடங்களுக்கு திருச்சியிலிருந்து விமான சேவையை இயக்கி வந்தன.
இதன்பின், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை துவக்கியது. படிப்படியாக தற்போது மிகின்லங்கா, ஏர் ஏசியா, கிங் பிஷர், ஜெட் ஏர்வேஸ், டைகர் ஏர்வேஸ் என விமான நிறுவனங்கள் அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், சென்னை போன்ற இடங்களுக்கு விமான சேவையை இயக்கி வருகின்றன.


இந்தியன் ஏர்லைன்ஸ், பாரமவுண்ட் ஏர்வேஸ் ஆகியவை மட்டும் சேவையை நிறுத்தின. இதன் மூலம் மிகவும் "பிஸி'யான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் மாறியது. திருச்சி விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து (கார்கோ போர்ட்) வசதி துவக்கப்பட வேண்டும் என நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதமே "கார்கோ போர்ட்' வந்துவிடும் என வந்த அறிவிப்பு, காரணம் தெரியாமல் தள்ளிப்போனது. இறுதியில், மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து மத்திய கலால் மற்றும் சங்கத்துறைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 
இதன் மூலம் தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து குறிப்பாக சார்ஜா, குவைத், துபாய், சிங்கப்பூர், கோலாம்பூர், கொழும்பு ஆகிய வெளிநாடுகளுக்கு மட்டுமே காய்கறிகள், பூ போன்ற அழுகும் பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி உள்ளது. "கார்கோ போர்ட்' என்ற சரக்கு போக்குவரத்து துவங்குவதன் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் சரக்கு ஏற்றுமதி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் மூலம் திருச்சி விமான நிலையத்துடன் சர்வதேச நாடுகள் நேரடி தொடர்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் "கார்கோ' வசதியை பழைய டெர்மினல் கட்டிடத்தில் துவக்க திட்டமிடப்பட்டது. பழைய டெர்மினல் கட்டிடத்தில் குறிப்பிட்ட அளவுக்கு புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் இந்த சேவையை விரைவாக துவக்க முடியும் என்ற அடிப்படையில் இதற்கான டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்பட்டு, கட்டுமான பணியை மேற்கொள்ள பழைய டெர்மினல் வளாகத்தில்
பூமி பூஜை நடந்தது.

இந்த பணிகளை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் தற்போது மாதம் சராசரியாக 250 மெ. டன் சரக்கு கையாளப்பட்டு வருகிறது. சரக்கு போக்குவரத்து வசதி வந்தவுடன் இரண்டு ஆண்டுகளில் இரண்டாயிரம் டன் என்ற இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளது. சரக்கு இறக்குமதி மூலம் விமான நிலையத்தின் வருவாயும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சரக்குகளை கையாள சிங்கப்பூர், சென்னை, திருவனந்தபுரம், கோவை உட்பட பகுதிகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் அணுகியுள்ளன. கார்கோ வசதி துவக்கப்படுவதன் மூலம் திருச்சி விமான நிலையம் புதியதோர் மைல் கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...