Monday, July 11, 2011

திருவையாற்றில் புறவழிச் சாலை அமைக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர்:-திருவையாற்றில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

திருவையாறு காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து அரியலூர் சாலையில் காவல் நிலையம் வரையிலும், கும்பகோணம் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் வரையிலும், கல்லணை சாலையில் மகளிர் காவல் நிலையம் வரையிலும் ஏற்படும் வாகன நெருக்கடியால் போக்குவரத்து தடைப்படுவது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

பேருந்து நிலையப் பகுதியில் கடைவீதிகள் குறுகலாக இருப்பதால், அங்கு அடிக்கடி போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து காவல் நிலையம் வரையிலான சுமார் இரண்டு கி.மீ. நீளத்தை கடப்பதற்கு 15 நிமிஷங்களுக்கும் மேலாகி விடுகிறது.

பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்த சாலைகள், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

தஞ்சாவூர், கல்லணை, பூண்டி, திங்களூர், திட்டை, கும்பகோணம் என்று ஆன்மிக மற்றும் சுற்றுலாப் பிரசித்திப் பெற்ற பகுதிகளின் மையமாக திருவையாறு இருப்பதால், அங்கு வாகனப் போக்குவரத்தும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

பெருகி வரும் வாகனப் போக்குவரத்துக்கு போதுமான விரிவான, சீரான சாலை வசதிகள் அங்கு இல்லாதது பெரும் குறை. இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் காவிரி ஆற்றின் அருகிலிருந்து கும்பகோணம் மற்றும் கல்லணை சாலைகளை இணைக்கும் வகையில், புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பது திருவையாறு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தொடர்புடைய துறைகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்துள்ளன. ஆனால், இதுவரை புறவழிச் சாலை அமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் தியாகராஜ பாகவதரின் ஆராதனை நிகழ்ச்சியை காண பல நாடுகளிலிருந்து இசை ரசிகர்களும், கலைஞர்களும் வருகின்றனர். இத்தனை சிறப்புமிக்க இந்த நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நிரந்தர தீர்வாக புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

2 comments:

  1. ஸ்ரீரங்கம் திருச்சியோடு இணைத்திருப்பது போல வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜர் கீர்த்தனை நடைபெறும் திருவையாறை தஞ்சை மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அப்போது தான் சாலை மற்றும் நகர மேம்பாட்டு வசதி ஏற்படும்

    ReplyDelete
  2. Nizamuddeen....நீங்கள் சொல்வது சரியான முடிவு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...