Wednesday, February 22, 2012

நோயாளியைக் காணச் செல்பவன் சுவனப்பூங்காவில் இருப்பவன் போலாவான்


ஒருவன் நோயாளியைக் கானச்சென்று நலம் விசாரித்து வரும்வரை அவன் சுவனப் பூங்காவில் இருப்பவன் போலாவான் என்றும்,

அவனுக்கு எழுபதாயிரம் வானவர்களைக் கொண்டு இறைவன் நிழல் வழங்குவான் என்றும்,


அவன் எழுநூறு நாட்கள் நோன்பு நோற்ற பலனைப் பெறுவான் என்றும்,

அவன் காலையில் நோயாளியின் நலன் விசாரிக்கச் சென்றால் மாலைவரை அவனுக்காக வானவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவர் என்றும்,


மாலையில் சென்றால் அடுத்த நாள் காலைவரை அவ்விதம் செய்வர் என்றும்,

அவன் நோயாளியின் நலம் விசாரிக்கத் தன் இல்லம் விட்டுப் புறப்பட்டுவிட்டால் அவனையும் நோயாளியையும் அல்லாஹ்வின் அருள் சூழ சூழ்ந்துகொள்ளும் என்றும்,



நோயாளி அர்ஷின் நிழலில் இருக்குங்கால் நலன் விசாரிக்கப் போனவர் ஹளீரத்துல் குதுஸெனும் இடத்திலிருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.

நோயாளியை நலம் விசாரிக்க செல்பவரை நோக்கி உன் நிலைமை நல்லதாகட்டும், நீ நடந்த தொலை தூரங்கள் நன்மையாகட்டும், அதனால் நீ சுவனபதியில் நுழைவாயாக என்று வானவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (நூல்: முஸ்லிம்)


சுற்றத்தாரும் அண்டைவீட்டாரும் அவர்கள் விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களிடம் சென்று நலன் விசாரிப்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). தன்னை வெறுத்து தன்மீது குப்பை கொட்டிய கிழவி நோயால் பீடிக்கப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கிழவியை நலம் விசாரிக்கச் சென்ற வரலாறு நம் மனதில் என்றென்றும் இருக்கட்டும்.


நோயாளியை சந்திக்கும்போது ஸலாம் சொல்லி ஆறுதல் கூறுவது விரும்பத்தக்கச் செயலாகும். நோயாளியை நலம் விசாரிக்கும்போது நோயாளியை நோக்கி "நீங்கள் நலம் குன்றியிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்கும் ஒவ்வொரு ''துஆ''வும் இறைவனால் அங்கீகரீகப்படக்கூடும், எனவே எனக்காகவும் நீங்கள் இறைவனிடம் வேண்டுங்கள்" என்று கூறுதல் வேண்டும். இப்படிக் கூறுவதால் அவர் மனச் சாந்தி பெறுகிறார்.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நோயாளிகளை நீங்கள் நலம் விசாரிக்கச் சென்றால் உங்களுக்காகவும் து ஆ செய்யும்படியும் நோயாளிகளிடம் வேண்டுங்கள். நோயாளி கேட்கும் ''துஆ'' நிச்சயமாக கபூலாகும். ஏனெனில் அவர் பாவம் மன்னிக்கப்பட்டவராய் இருக்கிறார். (நூல்: தப்ரானி)


நோயாளி தனக்கேற்பட்ட நோய் நீங்க மருந்துண்பது சுன்னத்து. நோயாளி தனக்கு உயிர் பிரியப்போக இருப்பதாக எண்ணி மருந்தேதும் உண்ணாமல் இருப்பது விரும்பத்தக்கதல்ல. நோயின் துன்பத்தைப் போக்கி போதிய சுகம் காண மருந்துண்ண வேண்டும்.


ஏனெனில்,

"இறைவன் நோயையும், மருந்தையும் நிச்சயமாக இறக்கி ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்தை உண்டுபண்ணியுள்ளான். எனவே, நீங்கள் மருத்துவம் செய்யுங்கள். ஆனால், ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள்." என்று

அண்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்ள் அபூதாவூது)

நோய் பீடிக்கப்பட்டவர்கள் கையாள வேண்டிய விதிமுறைகள்:

o வியாதியின் கடுமையைப் பொருத்துக் கொள்ளுதல்.

o அதைப் பற்றிப் பிறரிடம் பிதற்றுவது, மூறையிடுவது சரியல்ல.


o இறைவா! என்ன சோதனை இது! என மனம் வருந்தாதிருத்தல்.


o முணக்கத்தை விடுதல்.

o அல்லாஹ்வை ஏற்றிப்போற்றி அதிகமாக அவனை தஸ்பீ ஹ் செய்தல்.

நோயாளி தனக்கேற்பட்டுள்ள வியாதியின் தன்மை பற்றி நெருங்கிய உறவினர், மருத்துவர்கள், உயிர்த் தோழர்கள் போன்றொரிடம் கூறி தகுந்த பரிகாரம் தேடலாம்.


''நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகத்தைக் கொடுப்பவனும் அல்லாஹ்வே" என்பதை மறந்திட வேண்டாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...