Sunday, November 27, 2011

இந்திய ரூபாய் மதிப்பு பலத்த சரிவு!

 
கடந்த சில வாரங்களாக, இந்திய நாணய மதிப்பு பலத்த வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆசியாவிலேயே மோசமான வீழ்மதிப்பையும், உலகளவில் மூன்றாவது மோசமான வீழ்ச்சியிலும் இந்திய ரூபாய் உள்ளது.
கடந்த 32 மாதங்களில் இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.51.35 என்ற அளவில் (செய்தியின் இந்நொடியில்) உள்ளது. இந்திய ரூபாயின் இந்த வேகமான வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சரிவை தடுக்க இயலாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நிய செலாவணியில் தேவைக்கும் இருப்புக்குமிடையே பாரிய இடைவெளி நிலவுகிறது என்று பணப் பரிவர்த்தகர் ஒருவர் கருத்து கூறினார்.

இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அயலவர் தங்கள் முதலீட்டை பெருமளவில் திரும்பப் பெற்று வருவதாலும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வோருக்கு அதிக அந்நியச் செலாவணி தேவையிருப்பதாலும், இந்திய பணமதிப்பின் இச்சரிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஜூலை முதல் 15 விழுக்காடு என்ற அளவில் ரூபாயின் முகமதிப்பு சரிந்துள்ளது. ஐரொப்பிய பொருளாதரச் சரிவுநிலையும், இந்திய உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின்மையும் இந்திய பணவீக்கத்தின் மதிப்பை இரட்டை இலக்கத்திற்கு தள்ளிவிட்ட மறைமுகக் காரணிகள் என்று சொல்லப்படுகிறது.

எனினும் பணமதிப்புக்குறைவைக் கட்டுபடுத்தும் எந்த செயலையும் செய்வதற்கு இந்தியாவின் ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எதிர்விளைவை ஏற்படுத்தாத வகையிலான திட்டங்கள் / பங்குச் சந்தை முதலீட்டு ஈர்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சுபீர் கொர்கன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்திய பணமதிப்பின் இந்தச் சரிவை பயன்படுத்திக்கொள்ள அயல்வாழ் இந்தியர்கள் ஆர்வங்காட்டி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக, அயலகம் வாழ் இந்தியத் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அளவு 21 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் மட்டும் கடந்த 30 மாதங்களில் இல்லாத சாதனை அளவாக சுமார் 65 மில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 320 பில்லியன் டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...