
அல்லாஹ்விற்க்கு மிக விருப்பமான செயல் எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்குவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும் என பதிலளித்தார்கள். அதற்கடுத்தது எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்வது என்றார்கள். அதற்கடுத்தது எது? என்று கேட்டேன். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) புகாரி, முஸ்லிம்.
அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்: சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 4628)
ஒரு முஸ்லிம் தன் மீதுள்ள பெற்றோருக்குரிய உரிமைகளையும் அவர்களுக்கு நன்மை செய்வது, கட்டுப்படுவது மற்றும் உபகாரம் செய்வதன் கடமையையும் நம்ப வேண்டும். இது அவன் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதற்காகவோ அல்லது அவனுக்கு அவர்கள் செய்த நன்மைக்காக அவன் கைமாறு செய்யக் கடமைப்பட்டிருக்கிறான் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களுக்கு கட்டுப்படுவதை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான் என்பதற்காகத்தான்.
அல்லாஹ் கூறுகிறான்: அவனையன்றி வேறெவரையும் நீங்கள் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் உமது இறைவன் விதித்திருக்கிறான் (அல்குர்ஆன்: 17:23)
பாவங்களில் மிகப்பெரும் பாவம் எது? என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என நபி( ஸல்) அவர்கள் கேட்டபோது நபித்தோழர்கள் ஆம் என்றனர். உடனே நபி(ஸல்) அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோருக்கு மாறுசெய்வது, பொய் சாட்சி சொல்வது ஆகியவையாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி), நூல்:புகாரி, முஸ்லிம்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாத் செய்வதற்கு அனுமதி கேட்டார். அதற்கவர்கள் உன் பெற்றோர் உயிருடன் இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றதும் அவர்களிடம் ஜிஹாத் (பணிவிடை) செய்வீராக! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
முஸ்லிம் பெறோருக்குரிய இக்கடமைகளை ஏற்று அல்லாஹ்வுக்கு வழிப்படும் பொருட்டும் அவனது அறிவுரைகளை நடைமுறைப் படுத்தும் பொருட்டும் அதனை முழுமையாக நிறைவேற்றும்போது அவர்கள் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, அவனது ஷரீஅத்திற்கு முரணில்லாத விஷயங்களில் பெற்றோர் ஏவுகின்ற, விலக்குகின்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஏனெனில் படைத்துவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் எந்தப் படைப்புக்கும் கட்டுப்படுதல் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: எதனை நீ அறியமாட்டாயோ அதனை என்னோடு நீ இணைகற்பிக்க வேண்டுமென்று அவர்கள் இருவரும் உன்னை நிர்ப்பந்தித்தால் அவர்களுக்கு நீ ஒருபோதும் கட்டுப்படவேண்டாம். (அல்குர்ஆன்: 31:15)
நபி(ஸல்)கூறினார்கள்: படைத்துவனுக்கு மாறு செய்யும் விஷயத்தில் எந்தப் படைப்புக்கும் கட்டுப்படுதல் கூடாது. நூல்:அஹ்மத், தப்ரானி.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: ‘ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
நம்மை பெற்று வளர்த்த இருவரையும் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இன்னும் அவர்களிடம் கனிவுடனும் கருணையுடனும் நடந்துகொள்ளல் வேண்டும். சொல்லாலும் செயலாலும் அவர்களிடம் கண்னியமாக நடந்துகொள்ள வேண்டும். தனது குரலை அவர்களின் குரலுக்கு மேல் உயர்த்தக் கூடாது
அவர்களுக்கு முன்னால் நடக்கவும் கூடாது. அவர்களை விட தன் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ முன்னுரிமை வழங்கக் கூடாது. அவர்களின் அனுமதியும் திருப்தியுமின்றி பயணம் மேற்கொள்ளக் கூடாது.
அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பது, அவர்களுக்கு மருத்துவம் செய்வது, துன்பங்கள் தொல்லைகள் நேராமல் பார்த்துக்கொள்வது, தன்னையே அவர்களுக்காக அர்ப்பணிப்பது போன்ற பல்வேறு நன்மைகளையும் நல்லுபகாரங்களையும் தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கு செய்ய வேண்டும்.
அவர்களுக்காகப் நாம் அதிகம் அதிகம் பிரார்த்தனை செய்யவேண்டும், பாவமன்னிப்பு தேட வேண்டும். இன்னும் அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும்,
நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
No comments:
Post a Comment