Sunday, May 22, 2011

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர் சாலை விபத்தில் உயிரிழந்தார்

Minister Mariam Pichai
திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

சமீபத்தில் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் என்.மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேருவை வீழ்த்தியதால் இவரை பதவி தேடி வந்தது.

இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா சட்டசபையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மரியம் பிச்சை,திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார். 

கார் சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையோரமாக நின்றிருந்த பஸ் மீது கார் பலமாக மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அமைச்சர் பயணித்த காரை சென்னையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டி வந்தார். கார் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை டிரைவர் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் கார் மோதியது. இதில் காரில் இருந்த மரியம் பிச்சை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

வழியில் வந்த அமைச்சர் சிவபதி உதவினார்

இந்த நிலையில் அந்த சாலையில் சென்னையைநோக்கி விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதி வேறு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்ததைப் பார்த்த அவர் காரிலிருந்து இறங்கி மரியம் பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப உதவினார். பின்னர் அவரும் திருச்சி திரும்பிச் சென்றார். 

விபத்தில் மரியம் பிச்சை இறந்த தகவல் பரவியதும் திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுகவினர் அரசு மருத்துவமனையில் குவி்ந்தனர். அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

முதல் முறையாக பதவிக்கு வந்தவர்

மரியம் பிச்சை முதல் முறையாக எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். முதல் முறையிலேயே அவர் அமைச்சர் பதவிக்கும் உயர்ந்தவர்.

மரியம்பிச்சை திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. வரலாறு படித்துள்ளார். இவருக்கு பாத்திமாகனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ்முகமது, அமீர்முகமது என்ற 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

60 வயதான மரியம் பிச்சை ஆரம்பத்தில் திரைப்பட விநியோகஸ்தராக இருந்தவர். அரசுக்குச் சொந்தமான கலைவாணர் அரங்கத்தை குத்தகைக்கு எடுத்து மரியம் தியேட்டர் என்ற பெயரில்நடத்தி வந்தார்.

திருச்சி மாநகர அதிமுக அமைப்பாளராக செயல்பட்ட இவர் 27வது வார்டு கவுன்சிலராக இருந்தார். தேர்தலில் நிற்பதற்காக அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

விபத்தில் உயிரிழந்த மரியம் பிச்சையின் உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...