Wednesday, May 11, 2011

இலவச விடுதி வசதியுடன் பிளஸ்-1, பிளஸ்-2 கல்வி

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனிதநேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: 

மனிதநேய அறக்கட்டளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.
அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர்-625 106, மதுரை மாவட்டம்(போன் 0452-3204545, மொபைல் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



உணவு, உடை, தங்குமிடத்துடன் இலவச கல்வி பெற வேண்டுமா?

திருச்சி: இலவச கல்வி பெற விரும்பும் ஆதரவற்ற மாணவர்கள் திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலை அணுகவும்.

இது குறித்து திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

கடந்த 60 ஆண்டுகளாக திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடில் அனாதை சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை செய்து வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றது.

முன்பு தாய், தந்தை இருவரும் இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து, அவர்களால் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ள குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐ.டி.ஐ.யில் சேர்க்கப்பட்டு, தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில், பாலிடெக்னிக் படிப்பில் சேர்க்கப்பட்டு பொறியாளர்கள் பணிக்கு வழி காட்டப்படுகின்றது.

திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடில் மாணவர்களை வாரம் ஒருமுறை டாக்டர் பரிசோதனை செய்கிறார். தேவைப்படுபவர்களுக்கு மருந்துகள் அளித்து, உடல்நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு ஓவியம், இசை, நாடகம், யோகா, கம்ப்யூட்டர் போன்ற சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

கடந்தாண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை சேர்க்க விரும்புவர்கள், ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை, திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டால், மாணவர் சேர்க்கை படிவம் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...