Sunday, April 10, 2011

மூட்டு வலியை விரட்ட.

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத். எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது. சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம். மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும்.

தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம். சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்னை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும். பாதுகாப்பு முறை விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும். சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம். புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் எலும்புக்கு வலு சேர்ப்பதால் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் விளையாடும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கூட மூட்டு வலி ஏற்படலாம்.

முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் குதித்தோடும் விளையாட்டுகளை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு எலும்பின் இறுதிப் பகுதியில் எலும்பு வளரும் நுனி உள்ளது. இந்த வளரும் நுனி பாதிக்கப்பட்டால் எலும்புகளின் வளர்ச்சி தடைபடும். பெரியவர்கள் வேலை செய்யும் போது ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்யாமல் இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் வயதாவதால் ஏற்படும் தசை தேய்மானத்தை தடுக்கலாம். தசையை வலுவாக்கும் பயிற்சிகள் இதற்கு உதவும். முழங்கால் மூட்டு உடலின் எடையை தாங்குவதால் அதிக எடை வலியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க முறையான எடைக்குறைப்பு வழிகளை மேற்கொள்ளலாம். உணவில் உப்பின் அளவை குறைக்கவும். நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இடையில் நடப்பதும், கால்களை நீட்டி மடக்குவதும் நல்லது. மூட்டு பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்படுவது பாதுகாப்பானது என்கிறார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...