
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஏழை மக்களுக்கான பொது விநியோகத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக, மக்கள் குடிமை உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. அந்த நிலையில், 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இன்னமும் 36 சதவீதம் என்று வைத்திருப்பது ஏன்? எந்த அடிப்படையில் வறுமைக் கோடு நிர்ணயிக்கப்படுகிறது?
இரண்டு இந்தியாக்கள் இருப்பதை ஏற்க முடியாது. ஊட்டச்சத்து கிடைக்காத நிலைக்குக் காரணமான இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்வது? நீங்கள் (மத்திய அரசு) இந்நாட்டை வல்லரசு என்று கூறுகிறீர்கள். ஆனால், மறுபக்கம் உணவின்றி மக்கள் பட்டினியால் செத்து மடிகிறார்கள். ஊட்டக் குறைவை முழுமையாக நீக்க வேண்டும்.
நம் நாட்டின் உணவுக் கிடங்களில் போதுமான அளவுக்கு உணவுப் பொருட்கள் உள்ளன என்று நீங்கள் (மத்திய அரசு) மகிழ்ச்சியுடன் கூறுகிறீர்கள். அதே நேரத்தில், உண்ண உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனரே, இது என்ன வினோதம்?
ஊட்டக் குறைவு நிலையைப் போக்க, பொது விநியோகத் திட்டத்தை அரசு பலப்படுத்தி வருவதாகவும், அதனால் ஊட்டமின்மை குறைந்து வருவதாகவும் சொல்லும் பதிலை ஏற்க முடியாது. அது முழுமையாக இல்லாத நிலை ஏற்படவேண்டும்.
நாட்டின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதாக வந்த நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன. இது மகிழ்ச்சி தரக் கூடிய செய்திதான். ஆனால், அதன் பலன் மக்களுக்கு சென்று சேரவில்லை என்றால் என்ன பயன்?
நகர்புறத்தில் நாள் ஒன்றிற்கு ரூ.20க்கும் அதிகமான சம்பாதிப்பவர்கள், கிராமப்புறங்களில் ரூ.11க்கும் அதிகமாக வருவாய் உள்ளவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மக்கள் என்று திட்ட ஆணையம் கூறுவதை ஏற்க முடியுமா?
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை அளவிட என்ன அடிப்படை கையாளப்படுகிறது என்பதை திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் விளக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்," என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி- ஜூனியர் விகடன்.
No comments:
Post a Comment