பக்கங்கள்

Thursday, November 24, 2011

5 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாடு கேரளாவில் டிசம்பரில் தொடக்கம்

டெல்லி: 5 நோய்களுக்கு ஒரே ஊசி மூலம் தடுப்பு மருந்துகளை செலுத்தும் பென்டாவேலண்ட் தடுப்பூசி திட்டம் தமிழகம் மற்றும் கேரளாவில் டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது.

டிப்தீரியா, பெர்டூசிஸ், டெட்டனஸ், மஞ்சள் காமாலை, மூளை காய்ச்சல் ஆகிய நோய்களைத் தடுக்கும் தடுப்பாற்றலை இந்த தடுப்பூசி அளிக்கும் என்பதால் குஜராத், கர்நாடகா, உள்ளிட்ட 10 மாநிலங்கள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களான டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூசிஸ் ஆகிய 3 நோய்களுக்கு "டிபிடி' எனப்படும் முத்தடுப்பு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மூன்று தடுப்பு மருந்துகளோடு, "ஹெப்படைடீஸ் பி' மஞ்சள் காமாலை தடுப்பு மருந்து, மூளைக் காய்ச்சலைத் தடுக்கும், "ஹிப்' தடுப்பு மருந்து ஆகிய 5 தடுப்பு மருந்துகளையும், ஒரே தடுப்பூசியில் (பென்டா வேலன்ட்) போடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரே ஊசியில் 5 மருந்து


ஒவ்வொரு தடுப்பு மருந்துகளையும் தனித்தனியாக போடும் போது, குழந்தைகளை அதிக முறை ஊசியால் குத்தி, துன்புறுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் போது, ஓரிரு நாட்கள் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆனால், 5 தடுப்பு மருந்துகளையும் ஒரே ஊசியில் போடுவதால், குழந்தைகளுக்கு தொந்தரவுகள் குறைவு என்பதால், மத்திய சுகாதாரத் துறை பென்டா வேலன்ட் தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது.

10 மாநிலங்களுக்கு தடுப்பூசி

இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் பி.கே.பிரதான் கூறியதாவது: ஜெனீவாவை சேர்ந்த தடுப்பூசிகளுக்கான உலக கூட்டமைப்பு (காவி), 5 நோய்களை தடுக்கும் ஒரே தடுப்பூசியை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குகிறது. ரூ.765 கோடி மதிப்புள்ள தடுப்பூசியை 3 ஆண்டுகளுக்கு வழங்குகிறது. இவை 10 மாநிலங்களில் பயன்படுத்தப்படும். முதல்கட்டமாக தடுப்பூசி போடுதலில் சிறப்பாக செயல்படும் தமிழகம் மற்றும் கேரளாவில் திட்டம் தொடங்கப்படுகிறது.

50 லட்சம் தடுப்பூசிகள்

இரு மாநிலங்களிலும் முதல் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 10 டோசாக அளிக்கப்படும். முதல் ஆண்டில் 50 லட்சம் டோஸ் தேவை. குஜராத், கர்நாடகா, அரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த மாநிலங்களில் தடுப்பூசியை கையாளும் திறனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

மருந்துகள் அனுப்பும் பணி

கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளத்திலும், தமிழ்நாட்டில் சென்னையிலும் இந்த தடுப்பூசி மருந்துக்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டிற்கு 12.5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாத இறுதிக்குள் 6 லட்சம் ஊசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இரு மாநிலங்களிலும் மொத்தம் 15 லட்சம் குழந்தைகளுக்கு இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment