பக்கங்கள்

Wednesday, May 8, 2013

பள்ளிகளில் இனி பெண்கள் விளையாடலாம்: சவுதி அரசு அனுமதி


ரியாத்: சவூதி அரேபியா அரசு முதன்முதலாக விளையாட்டை அங்கீகரித்துள்ளது.பெண்கள் விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம்,

இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் வெளியிட்டது. கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளில் கூறியுள்ளதாவது: பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம். ஷரியா மதக் கோட்பாடுகள், பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றது என கல்வி அமைச்சகத்தின் தகவல் அதிகாரி முகமது அல் தகினி தெரிவித்துள்ளார்.

ஆனால், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் அல்ல என்று சவுதியில் ஒரு சிலர் கருதுகின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு தனியே இயங்கிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய முயற்சி பொதுப் பள்ளிகளில் வேண்டுமானால் புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சவுதி அரசு, பெண்கள் விளையாட்டிற்கு வெளிப்படையாக அனுமதி அளிப்பது இதுவே முதன் முறையாகும்.

தமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி


சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது பான் மசாலா, குட்கா போன்றவற்றை இங்கு தயாரித்து, விற்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சட்டசபையில் அவர் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவி்ப்பில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும். ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து குட்கா , பான் மசாலா போன்றவற்றை தமிழகத்தில் தயாரிக்க முடியாது, கடைகளில் விற்க முடியாது. யாரும் இருப்பு வைக்கவும் கூடாது. இதன் மூலம் சாந்தி உள்ளி்ட்ட பெயர்களில் பான் பராக்கை கண்ட இடங்களில் மென்று தினறு புளிச் புளிச் என யாரும் துப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Thursday, May 2, 2013

இழந்த செல்வாக்கை மீட்பதற்காக சாதி மோதலைத் தூண்டும் பாமக: சிபிஎம் கடும் தாக்கு


கோயம்புத்தூர்: தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டி இழந்த பலத்தை மீட்பதற்கு பாமகவினர் முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியினர், மரக்காணத்தில் உள்ள தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, பீமா ராவ் ஆகியோர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

கடந்த 2012-ம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போதும் சமுதாய நல்லிணக்கம் பாதிக்கப்படும் வகையில் காடுவெட்டி குரு பேசியுள்ளார். இதைத் தொடர்ந்தே தருமபுரி மோதல் சம்பவம் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற சித்திரைத் திருவிழாவையொட்டியும் மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இழந்த பலத்தை மீட்கவே சாதி கலவரத்தை பாமகவினர் தூண்டி வருகின்றனர். சமூக நீதியைக் காக்கவும், சமுதாய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் பாமக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி ரீதியான அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதைக் கொண்டு தேர்தல் முடிவுகளும் அமையாது. தமிழகத்தில் நிலவி வரும் சாதி மோதலைக் கண்டித்து மே 8-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

மோடிக்கு விசா வழங்கக் கூடாது: அமெரிக்க பார்லிமென்ட் குழு கோரிக்கை


நியூயார்க்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கான தடையை நீடிக்க வேண்டும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் பார்லிமென்ட் குழு கோரிக்கை விடுத்திருக்கிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு இனக்கலவரம் வெடித்தன. இதை முதல்வராக இருந்த மோடி தடுக்க தவறிவிட்டார் என்பது நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் புகார். இதனால் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்தது.

இந்த நிலையில் அமெரிக்க பார்லிமென்ட் நியமித்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷனின் தலைவர் காத்ரினா லாண்டோஸ் ஸ்வெட் வாஷிங்டனில் நேற்று செய்த்யாளர்களிடம் பேசுகையில், குஜராத் வன்முறைக்கும், அங்கு நடந்த பயங்கர சம்பவங்களுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அந்த காரணங்களுக்காக நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது பொருத்தமாக இருக்காது என்றார்.

மேலும் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷன் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதில் மோடி விசாவுக்கு விண்ணப்பிக்க கூடும் என்ற அச்சத்தில், அவருக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அந்த கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் பிரசவம்: குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயண சலுகை


மெக்ஸிகோ: விமானத்தில் பிறந்தால், ஆயுள் முழுக்க விமானப் பயணம் இலவசம் என கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல், ஒரு குழந்தை ரெயில் நிலையத்தில் பிறந்ததால், அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரெயில் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நாட்டில் உள்ள மெக்ஸிகன் சிட்டி நகரத்தில் செவ்வாய் அன்று 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல சுரங்க ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார்.

ரெயிலில் ஏறுவதற்கு முன்னரே அவருக்குப் பிரசவ வலி எடுத்துள்ளது. அங்கிருந்த ரெயில் நிலைய ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் ரயில் நிலைய நடைபாதையிலேயே ஒரு அழகிய ஆண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார். இதையடுத்து, அந்நகரத்தின் மேயர் மிக்யுல் ஏஞ்செல் மன்செரா அந்த குழந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், தன் வாழ்நாள் முழுவதும் அக்குழந்தை இலவசமாக சுரங்க ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் இணையதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் அம்பானிக்கு இசட் பிரிவா?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

 Supreme Court Questions Centre Over Providing Security
டெல்லி: ஆரம்பம் முதலே முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், தற்போது ‘ 5 வயது சிறுமி பாதுகாப்பு இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். ஆனால், இவருக்கு ஏன் இசட் பிரிவு பாதுகாப்பு' என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சில அச்சுறுத்தலின் எதிரொலியாக, தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மத்திய அரசுக்கு ரூ.16 லட்சம் வரை கட்டணமாக செலுத்துகிறார். இதனை இடதுசாரி கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ள நிலையில்,

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு படை தவறாக பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதி சிங்வி, மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினார். அதில் ‘பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைவான சூழலில் தனிமனிதருக்கு மத்தியபடை பாதுகாப்பு வழங்குவது ஏன்? பாதுகாப்பு குறைபாடுகளால்தான் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்படி தனிமனிதருக்கு பாதுகாப்பு வேண்டுமெனில், அவர்கள் தனியாக வாடகை காவலாளிகளை அமைத்து கொள்ளலாம்' என்றும் கூறினார்.